• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் கின்னஸ் சாதனை -105 மணி நேரத்தில் 75 கி.மீ. சாலை

ByA.Tamilselvan

Jun 8, 2022

குறைந்த நேரத்தில் மிக நீளமான சாலையை அமைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது இந்தியா. தேசிய நெடுஞ்சாலை எண் 53ல் 105 மணி நேரத்தில் 75 கி.மீ நீளத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பிட்டுமினஸ் கான்க்ரீட் கொண்டு இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஒழுங்குமுறை ஆணையம் நஹாய் (NHAI), ராஜ்பத் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடட் நிறுவனத்துடன் இணைந்து இந்த சாலையை கட்டமைத்துள்ளது. இந்தச் சாலை, NH-53 நெடுஞ்சாலையில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மற்றும் அகோலா மாவட்டங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக சாலைப் பணியாளர்கள் தொடர்ச்சியாக 105 மணி நேரம் பணியாற்றினார்கள். ஜூன் 3ஆம் தேதி காலை 7.27 மணிக்கு பணி ஆரம்பித்தது. ஜூன் 7 மாலை 5 மணிக்கு இந்தப் பணி முடிந்தது. மொத்தம் 105 மணி நேரம் 33 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. 720 பணியாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்துள்ளனர்.
கடந்த 2019ல், கத்தார் தலைநகர் தோஹாவில் 25.25 கி.மீ. நீளத்தில் பிட்டுமினஸ் கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டது. 10 நாட்களில் இந்த சாலை அமைக்கப்பட்டதே முந்தைய கின்னஸ் சாதனையாக இருந்தது. அதை இந்தியா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த என்எச்-53 நெடுஞ்சாலை கொல்கத்தா, ராய்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கிறது.
இந்த சாதனைக்காக தேசிய தேசிய நெடுஞ்சாலை ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரான ராஜ்பத் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடட் நிறுவன ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.