இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவுப் பள்ளி கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் VI பள்ளி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆசிரியர் மற்றும் மாணவர் கல்வி முறைக்கு இது அச்சுறுத்தலாக இருக்குமா என்பது குறித்து பார்ப்போம்.
செயற்கை நுண்ணறிவு (VI) தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் பல்வேறு துறைகளில் அதி வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் 18 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேச உதவியுள்ளது VI. இது மருத்துவ துறையில் விந்தையாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கேரள மாநிலத்தில் ஏஐ பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 22-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த பள்ளியில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற தொழில்நுட்பமும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க உள்ளது. மாணவர்கள் கல்வி கற்கும் முறையை மேம்படுத்தப்பட்ட வகையில் மாற்றும் நோக்கில் இதனை முன்னெடுத்துள்ளது சாந்திகிரி வித்யாபவன் எனும் பள்ளி. இதன் மூலம் மாணவர்கள் தனித்துவ கற்றல் முறையை பெற முடியும் என அந்த பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பாடத்திட்டங்களை கடந்து உலகத்தரம் வாய்ந்த கற்றலை மாணவர்கள் பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளது. அதோடு புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த அனுபவ ரீதியான கற்றல் முறையை மாணவர்கள் பெற இது உதவும் எனவும் தெரிவித்துள்ளது. இது மாறி வரும் சவால் நிறைந்த உலகை மாணவர்கள் எதிர்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.