• Tue. Apr 30th, 2024

சந்திராயன் – 3 வெற்றி… பெருமிதத்தில் திட்டஇயக்குநரின் தந்தை..!

Byவிஷா

Aug 24, 2023

சந்திராயன் – 3 நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளதை யடுத்து, திட்டஇயக்குநரின் தந்தை என் மகன் பெயருக்கு ஏற்றார் போல் உலகிற்கே வீரனாகத் திகழ்கிறார் என்று பெருமைப்படுவது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் – என்கிற திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, இவன் தந்தை என்று பெருமைப்படும் அளவிற்கு சந்திராயன் 3 திட்டத்தில் வெற்றி பெற்று தந்தைக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல்.
சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக நிலவியல் தரையிறங்கி உள்ள நிலையில், சந்திரயான்3 மிஷனின் திட்ட இயக்குனராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேலுக்கு புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தந்தையை ஊடகத்துறையினர் சந்தித்து பேசி வருகின்றனர்.
சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பழனிவேலின் மகனான வீரமுத்துவேல் 1978ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை முடித்தார். திருச்சியில் மேற்படிப்புகளை முடித்தார். பின்னர் இஸ்ரோவில் 2004ஆம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வந்தார். இவருக்கு 2019ஆம் ஆண்டு சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சந்திரயான்3 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.
சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை (2023, ஆகஸ்டு 23ந்தேதி மாலை 6.04மணி அளவில்) நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ள நிலையில், அந்த திட்டத்தின் மூளையாக திகழ்ந்த விழுப்புரத்தை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிகழ்வை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த அவரது தந்தை மற்றும் அவரது உறவினர்கள் விழுப்புரம் வ.உ.சி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அக்கம் பக்கத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விஞ்ஞானி வீரமுத்துவேலை தொலைப்பேசியின் வாயிலாக தொடர்புகொண்டு, சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
இதுகுறித்து கருத்துதெரிவித்த சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்..,
வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கு… எப்படி பயன்படுத்தி கொள்கிறோம் என்பதில் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வீரமுத்துவேலின் தந்தை, தனது மகனை நாட்டுக்காக ஒப்புக்கொடுத்துவிட்டேன் என்று தெரிவித்து உள்ளார். ,”சந்திரயான்-3 திட்டம் எனது மகனுக்கு கொடுக்கப்பட்டதில் இருந்து அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அவர் வீட்டிற்கு கூட வரமால் இதற்காக பணியாற்றினார். நிலவின் தென் துருவத்தில் அனுப்பி இந்தியா வெற்றி கண்டுள்ளது, இந்தியா வல்லரசு நாடாட மாறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூட வேண்டும்.
விடாமுயற்சியுடன் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய எனது மகனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் பெயரை போலவே பெரும் வீரத்துடன் செயல்பட்டுள்ளார். இது இந்தியாவுக்கு, தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரும் புகழை சேர்த்துள்ளது. தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அவர் இந்த திட்டத்திற்கு பொறுப்பேற்றதில் இருந்து வீட்டிற்கும் வருவதில்லை, என்னிடமும் சரியாக பேசியதில்லை. மேலும், இந்தியாவுக்காகவே எனது மகனை ஒப்புக்கொடுத்து விட்டேன்” என அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *