

இன்று துவங்கவுள்ள செஸ்ஒலிம்பியாட் தொடரில் பங்கறேகும் அணிகள் கோப்பையை வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் 6 அணிகள் பங்கேற்கின்றன.
சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் விளையாட்டிலேயே உயர்ந்த தொடராக ‘செஸ் ஒலிம்பியாட்’ கருதப்படுகிறது. இதுவே சர்வதேச அளவில் கவனம் பெற காரணமாக உள்ளது. இந்த வாய்ப்பை பெற்ற தமிழ்நாடு அதற்கான ஏற்பாடுகளையும் வியக்கும் வகையில் மேற்கொண்டுள்ளது.187 நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். ஓபன் பிரிவில் 188, பெண்கள் பிரிவில் 162 என முதன் முறையாக ஒலிம்பியாட் அதிக அணிகள் (350) பங்கேற்கின்றன. மொத்தம் 11 சுற்றுக்கள் கொண்ட இத்தொடரின் முடிவில் முதலிடம் பெறும் அணி சாம்பியன் கோப்பை தட்டிச் செல்லும்.
இந்தியாவை பொறுத்தவரையில் தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் மொத்தம் 6 அணிகளில் 30 நட்சத்திரங்கள் களமிறங்குகின்றனர். ஓபன் பிரிவில் இந்தியா ‘ஏ’ அணிக்கு உலகத் தரவரிசையில் ‘நம்பர்-2’ இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹரிகிருஷ்ணா, சசிகிரண் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். முதலிடத்தில் காருணா, சோ வெஸ்லே, ஆரோனியன் அடங்கிய அமெரிக்கா உள்ளது.
இந்தியா ‘பி’ அணியில் அதிபனைத் தவிர, பிரக்ஞானந்தா, நிகால் சரின், குகேஷ், சாத்வானி என நான்கு பேரும் ‘டீன் ஏஜ்’ வீரர்கள். இந்த அணி ‘நம்பர்-11’ இடத்தில் உள்ளது. இந்தியா ‘சி’ அணிக்கு ‘நம்பர்-17’ இடம் தரப்பட்டுள்ளது. ஓபன் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு ஹாமில்டன்-ரசல் கோப்பை தரப்படும்.
பெண்கள் பிரிவில் இந்தியா ‘ஏ’ அணி, ‘நம்பர்-1’ அந்தஸ்துடன் களமிறங்குகிறது. இதில் ஹரிகா, தானியா, வைஷாலி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அடுத்து 11வது இடத்தில் இந்தியா ‘பி’ அணி உள்ளது. இந்தியா ‘சி’ அணிக்கு 16வது இடம் தரப்பட்டுள்ளது. இரு பிரிவிலும் சேர்த்து முதலிடம் பெறும் அணிக்கு நோனா கேப்ரிந்தாஷ்வ்லி கோப்பை வழங்கப்படும்.
