• Sat. Apr 27th, 2024

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்திய அணி !!!

ByA.Tamilselvan

Sep 1, 2022

ஹாங்காங் அணியை வீழத்தி ஆசியகோப்பை கிரிக்கெட்தொடரில்சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துபாயில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில், இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிஜாகத் கான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். பவர்பிளேவில் இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆயுஷ் ஷுக்லா பந்துவீச்சில் ஐசஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தனர். ஹாங்காங் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் இந்திய ஜோடியால் தொடக்கத்தில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. கே.எல்.ராகுல் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் விராட் கோலியுடன் இணைந்து அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இதனால் இறுதி கட்டத்தில் இந்திய அணியின் ரன் ரேட் உயர்ந்தது. விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இறுதி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 4 சிக்சர்கள் அடித்து சிக்சர் மழை பொழிந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. கோலி 59 ரன்கள் சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது.
தொடக்க வீர்ரகளாக களமிறங்கிய கேப்டன் நிசாகத் கான் 10 ரன்கள், யாஸிம் முர்தசா 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். சிறப்பாக விளையாடி வந்த பாபர் ஹயாத் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சீரான இடைவெளியில் ஹாங்காங் அணி வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த அணியின் ஐசஸ் கான் 14 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கிஞ்சித் ஷா 30 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
இருப்பினும் இந்திய அணியின் இமாலய இலக்கை அடையும் அளவிற்கு ஹாங்காங் வீரர்கள் சோபிக்கவில்லை. இதனால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.’பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *