
ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்டம் மீனவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர மத்திய அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.
போர் சூழ்நிலை காரணமாக ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என இன்று புது டில்லியில் வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
ஈரான் நாட்டின் ஹோர்மொச்கன் மாகாணத்தில் கிஷ் தீவுகள் உள்ளன. மீன் பிடி தொழிலுக்கு பெயர் போன இந்த தீவில் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.
ஈரான்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் மூண்ட நிலையில், இவர்களது தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்பொழுது போர் முடிந்த போதிலும் கிஷ் தீவில் உள்ள மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட முடியாமல் உள்ளனர். அங்குள்ள சூழல் இன்னமும் பதட்டமான நிலையில், இருப்பதால் மீனவர்கள் அவர்களது படகுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி உள்ளனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தொடர்பு கொண்டு அவர்கள் நிலையை எடுத்து கூறினார். அவர்களது குடும்பத்தினர் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களை தொடர்பு கொண்டு இந்த மீனவர்களை மீட்டு கொண்டு வர கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று இன்று புது டில்லியில் வெளியுறவு துறை இணை செயலாளர் ஆனந்த் பிரகாஷ்யை சந்தித்த விஜய் வசந்த் மீனவர்களின் நிலைமையை எடுத்து கூறி, அரசு இவர்களை விரைந்து மீட்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு வழி இல்லாமல் தவிக்கும் மீனவர்களுக்கு அனைத்து வகை உதவிகளையும் அரசு உடனே செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார்.

குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் மேற்கொண்டுள்ள , மீனவர்களை மீட்கும் பணியை குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ சமுகத்தினர் வரவேற்று நன்றி தெரிவித்தார்கள்.
