3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
என்றாலும் கேரளாவிலும், மகாராஷ்டிராவிலும் இன்னமும் கொரோனா பரவல் அச்சுறுத்தியபடியே உள்ளது. குறிப்பாக கேரளாவில் ஓணம் பண்டிகைக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 15 சதவீதம் அளவுக்கு கொரோனா தாக்கம் அதிகரித்து இருப்பதுதெரிய வந்துள்ளது.
இந்தநிலையில் மத்திய அரசின் தேசிய பேரிடர் நிர்வாக கழகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த நிபுணர் குழு கூறுகையில், “இந்தியாவின் 3-வது அலை தவிர்க்க முடியாதது. அதற்கு ஏற்ப மத்திய அரசும், மாநில அரசும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் அந்த நிபுணர் குழு தெரிவித்துள்ள தகவலில், “3-வது அலை பெரியவர்களை பாதிப்பது போல சிறியவர்களையும் அதிக அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வசதிகளை இப்போதே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்றும் கூறி உள்ளது.
எச்சரிக்கை விடுத்துள்ள நிபுணர் குழு மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் அமைப்பாகும். இந்த நிபுணர் குழுவின் முழு தகவல்களும் தற்போது பிரதமர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் ஆய்வு செய்து வருகின்றன. எனவே 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.