குரூப் 2 காலிப்பணியிடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2,327 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ம் தேதி வெளியாகி ஜூலை 19ம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
குரூப் 2 தேர்வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் உள்பட 507 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப் 2 பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படுகிறது.
அதேபோல், குரூப் 2ஏ தேர்வில் தமிழ்நாடு மின்விசை நிதி, வருவாய் உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் 1,820 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கான தேர்வு செப்டம்பர் 14ம் நடைபெற்றது.
இந்த தேர்வுக்கு தமிழக முழுவதும் மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.81 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் குரூப் 4க்கு பணியிடங்கள் அதிகரித்தது போல குரூப் 2, 2ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அதாவது குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 213 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.
குரூப் 2 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
