மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குல தெய்வ கோவிலான கல்யாண கருப்பசாமி திருக்கோவில்.

இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட மக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் சூழலில், தினசரி மற்றும் மாசி சிவராத்திரி மற்றும் பண்டிகை காலங்களில் குல தெய்வத்தை வழிபட பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.
கடந்த மாதம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்த இந்த கோவிலில், இன்று காலை வழக்கம் போல கோவிலுக்கு வந்த பூசாரி ராஜா, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் ஆய்வு செய்து, ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து கோவில் உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற குல தெய்வ கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




