மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் ஊராட்சி, பன்னீர்வேலி கிராமத்தில், முற்றிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மேல்புறம் மனிதக் கழிவு இருந்தது கண்டறியப்பட்டது.

பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அவசர தேவைக்காக 30 அடி உயர நீர்த்தேக்க தொட்டியின் மேல் ஏறி இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில், அக்கட்சி பொறுப்பாளர்கள் குழு நேரில் பார்வையிட்டனர்.

தொடர்ந்து கிராம மக்கள் வீடுகள் தோறும் சென்று சம்பவம் குறித்து விசாரித்து கேட்டறிந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், பொதுமக்களிடம் விசாரித்ததில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதியில் கஞ்சா மற்றும் சாராயம் அருந்தும் நபர்களின் கூடாரமாக உள்ளதாகவும், இதில் போதை ஆசாமிகள் தலையீடு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாகவும் தெரிவித்தார்.

போதை கலாச்சாரம் அதிகரித்தது இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த நிவேதா முருகன், 30 அடி உயரம் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் சிறுவன் ஏறி சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறை என தெரிவிப்பது உண்மைக்கு மாறாக உள்ளது. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், உடனடியாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.