
உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் 22 பேர் கர்லா கட்டை சுழற்றும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.அதன் படி இருபது வயது இளைஞர்கள் துவங்கி நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என 22 பேர் அரை மணி நேரத்தில் 1320 முறை கர்லா கட்டையை சுழற்றி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

கோவை இரத்தினம் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற இதில்,கர்லா கட்டையை சுழற்றிய பயிற்சியாளர்களை கூடியிருந்த அவர்களது மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இது குறித்து சாதனையாளரும்,சோழன் உலக சாதனை புத்தகத்தின் மாவட்ட தலைவரும் ஆன பால முரளி கிருஷ்ணன் கூறுகையில், உடலை கட்டுகோப்பாக வைக்க உதவும் உடற்பயிற்சியான கர்லா கட்டை சுழற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சாதனையை செய்துள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து சாதனையாளர்களுக்கு சான்றிதழ்களை செயலாளர் திலகவதி வழங்கி கவுரவித்தார்..
