• Sat. Apr 20th, 2024

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 525 யானைகள் பலி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 525 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறையின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2007-ல் 125 யானைகளும், 2018-ல் 84, 2019-ல் 108, 2020-ல் 110, 2021-ல் 98 யானைகள் உயிரிழந்துள்ளன. ஆபத்தான நிலையில் யானைகள் இறப்புகள் ஏற்பட்டிருப்பினும், கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரு ஆண்டுகளாக யானை திட்டத்தின் கீழ் மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை.

இதுகுறித்து தமிழ்நாட்டின் தலைமை வனவிலங்கு காப்பாளர் சேகர் குமார் நீரஜ் கூறுகையில், நிதிப் பற்றாக்குறை நீண்டகால பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் யானைகள் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடிக்கான திட்டத்தை நாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம்.
இந்த திட்டத்தை மீண்டும் பொது நிதி மேலாண்மை அமைப்பில்(பிஎப்எம்எஸ்) பதிவேற்றுமாறு மாநில அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.

புலிகள் திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிதியைப் பெற்றுள்ளது. ஆனால் யானைகளுக்கான நிதி இன்னும் வெளியிடப்படவில்லை.
தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்திற்கு குறைவான நிதியே கிடைத்துள்ளது. 2017-2021ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கேரளாவுக்கு ரூ.23 கோடியும், அதே காலகட்டத்தில் கர்நாடகா ரூ.13 கோடியும் பெற்ற நிலையில், தமிழகத்துக்கு ரூ.9.75 கோடி மட்டுமே வழங்கப்பட்டது.

கடந்த 2012 வனவிலங்கு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 4,015 யானைகள் இருந்தன. ஆனால் 2017 கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் 2,761 காட்டு யானைகள் மட்டுமே உள்ளன. இது 38 சதவிகிதம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *