• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை – மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

Byமதி

Dec 20, 2021

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்கள் மீது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 55 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இலங்கைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

மீனவர்கள் தனுஷ்கோடிக்கும், நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள் மீனவர்களை கைது செய்து இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்று,
யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 12 மீனவர்களையும் அவர்கள் சென்ற படகையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் தாழ்வுபாடு கடற்படை முகாமில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 55 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததையடுத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள் மற்றும் மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தில்; சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடு போவதாகவும், திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் ராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 50 ஆயிரம் மீனவர்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதுகுறித்து “தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். டெல்லி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உடனடியாக இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர அனைத்து ஏற்படுகளையும் முதலமைச்சர் துரிதப்படுத்துவார். இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீடட்பது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளார், என தெரிவித்தார்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்களுக்கும் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறை காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் பிறப்பித்தார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்களின் பாதுகாப்பு நிச்சயம் உறுதி செய்யப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.