

கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மகாராஷ்டிராவில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள், உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் தினசரி கொரோனா பாதிப்பு பதிவான நிலையில், அதில் மகாராஷ்டிராவில் மட்டும் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்து பதிவாகிறது.
இதனால் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 41,434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 1,009ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் இரவுநேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பகல் நேரங்களில் அதாவது காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது, 11 மணிக்கு பிறகு அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற பணிகளுக்காக பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்படாது. பிப்ரவரி 15ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள், உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பணிகள் மற்றும் ஆசிரியர்களின் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். திரையரங்குகள், உணவகங்களில் 50 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அலுவலகத் தலைவர்களின் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றவர்கள் மட்டும் வரலாம். அரசு அலுவலக ஊழியர்கள் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதை தேர்வு செய்ய வேண்டும். அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், வேலை நேரத்தை சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

