• Fri. Apr 26th, 2024

பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் 18 மணி நேரத்துக்கு பின் வழக்கு பதிவு

பஞ்சாபில் பிரதமர் மோடியின்வாகனம், பாதுகாப்பு வாகனங்களை போராட்டக்காரர்கள் வழிமறித்த விவகாரத்தில் 18 மணி நேரத்துக்குப் பின்னர் பஞ்சாப் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.


இதில் பிரமதர் மோடியின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த 5-ம் தேதி பஞ்சாபில்நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் பாதி வழியிலேயே டெல்லி திரும்பினார்.


பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாஜகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் 18 மணி நேரத்துக்குப் பின்னர் பஞ்சாப் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதாவது ஜனவரி 6-ம்தேதி காலை 7.40 மணிக்கு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 அடையாளம் தெரியாத நபர்கள் பிரதமரின் வாகனத்தை வழிமறித்ததாக கூறப்பட்டுள்ளது.


ஆனால் அதில், வாகனங்களை வழிமறித்ததால் பிரதமர் மோடி மேற்கொண்டு சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை குறிப்பிடவில்லை. மேலும் இந்திய குற்ற வியல் நடைமுறை சட்டப்பிரிவு 283-ன் (பொது வழியில் அல்லது செல்லும் வழியில் ஆபத்து அல்லது தடை ஏற்படுத்துதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படும் நபருக்கு ரூ.200 அபராதம் மட்டுமே விதிக்கப்படும். இந்த வழக்கை போலீஸ் அதிகாரி பீர்பால் சிங் என்பவர் விசாரித்து வருகிறார்.


அவர் தயாரித்துள்ள எஃப்ஐஆர்-ல் கூறியிருப்பதாவது:
போராட்டக்காரர்கள் சாலையில் தடை ஏற்படுத்தியதால் பிரதமரின் வாகனம் ஜனவரி 5-ம் தேதி பகல் 1.05 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டது. பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பிரதமரின் வாகனம் பதிண்டாவின் விமான தளத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பீர்பால் சிங், சம்பவ இடத்துக்குச் சென்றபோது மோகா-பெரோஸ்பூர் சாலையில் சில அடையாளம் தெரியாத நபர்கள் சாலை மறியல் நடத்துகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *