• Sat. Apr 20th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Oct 14, 2022

நற்றிணைப் பாடல் 63:

உரவுக் கடல் உழந்த பெரு வலைப் பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்,
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப,
பசலை ஆகி விளிவது கொல்லோ
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம்
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே?

பாடியவர்: உலோச்சனார்
திணை: நெய்தல்

பொருள்:
தலைவன் நினைப்பால் தலைவி வாடுகிறாள். இவள் மேனியில் பசபசப்பு ஏற்படுகிறது. தாய் இவளைக் கட்டுக்காவலில் வைத்திருக்கிறாள். இந்த ஊருக்கு அறநெறி இல்லை. இந்த ஊரின் உப்பங்கழித் துறையில் சவாரிக் குதிரையை நிறுத்திக்கொண்டிருக்கும் சேர்ப்பனோடு இவளுக்கு உள்ள தொடர்பை அலர் தூற்றுமே. – வெளிப்புறம் தலைவிக்காகக் காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியிடம் இப்படிக் கூறுகிறாள். பரதவர் பெரிய வலையை வீசி வலிமை மிக்க கடலில் உழைத்துக் கொண்டுவந்த மிகுதியான மீன்கள் சேரியின் மணல் பரப்பில் காயும் புலால் நாற்றத்தோடு சேர்ந்து, கொத்தில் பூத்திருக்கும் புன்னை மலர்களின் நறுமணம் விழாக்காலம் போல வீசிக்கொண்டிருக்கும் ஊர் எங்கள் ஊர். இங்குள்ள மக்களுக்கு அறநெறி இல்லை.

அதனால், தாய் என்னைக் கட்டுக்காவலில் வைத்திருக்கிறாள். என் உடம்பில் உள்ள பசபசப்பு செத்து மடியவேண்டுமா? பறவைகள் அமர்ந்ததால் ஒடிந்து சேற்றில் விழுந்த பூக்கள் உப்பங்கழிக் காட்டில் உயர்ந்தோங்கிக் கிடக்கும். கடலலை அங்கு வந்து மீளும். அந்த இடத்தில் அவன் (தலைவன்) தன் இவுளியைக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறான். அவனோடு இருக்கும் தொடர்பை அறிந்து தாய் கட்டுக்காவலில் வைத்துள்ளாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *