• Fri. Apr 26th, 2024

இலக்கியம்

Byவிஷா

Nov 28, 2022

நற்றிணைப் பாடல் 64:
என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக!
அன்னவாக இனையல் தோழி! யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென,
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர்
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!

பாடியவர்: உலோச்சனார்
திணை: குறிஞ்சி

பொருள்:

எப்படிப்பட்டவர் ஆயினும், இனி அவரைப் பற்றி நினைக்க வேண்டாம். அவர் அப்படியே இருக்கட்டும். அவருக்காக வருந்தவேண்டாம். நம்மை இந்த நிலைமைக்கு உள்ளாக்கிவிட்டு அவர் பிரிந்துள்ளார்.
குறவர் மரல் செடியிலிருந்து நார் உரித்து அதனை உடுத்திக்கொள்வர். பெருமை அறியாமல் சந்தன மரத்தை அறுத்து வீழ்த்துவர். அது நீர் வற்றிப்போய் நன்றாகக் காய்ந்து பையப் பைய வறுமையுற்றுத் தானே இற்றுப்போகும்.

அந்தச் சந்தன மரத்தைப் போலத்தான் நானும். என் அறிவும் உள்ளமும் அவரிடம் சென்றுவிட்டன. என்னிடம் அவை இல்லை. என் உடம்பு காய்ந்து இற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. தோழி! இனி, அவர் வந்தாலும் என்னைப் பிரிந்த நோய்க்கு அவர் மருதாக மாட்டார். வாராமல் அங்கேயே இருந்துபோகட்டும். அவர் என் காதலர். இங்கே காமம் என்னை வருத்துகிறது. அதனால் துன்பம் உற்று வருந்துகிறேன். இதனைக் கண்டுகொள்பவர் யாருமில்லையே. தலைவி தோழியிடம் இப்படிச் சொல்லி அங்கலாய்த்துக் கொள்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *