• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Sep 13, 2022

நற்றிணைப் பாடல் 40:
நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர்- இமை பொருந்த,
நள்ளென் கங்குல், கள்வன் போல,
அகன் துறை ஊரனும் வந்தனன்-
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.

பாடியவர் கோண்மா நெடுங்கோட்டனார்
திணை மருதம்

பொருள்:

பிறந்த பச்சிளங் குழந்தையோடு செவிலி ஒருபக்கமும், குழந்தை பெற்ற தாய் மற்றொரு பக்கமும் உறங்கும்போது ‘குழந்தை பிறந்துள்ளது’ என்று என்னிடம் சொல்வதற்காகக் குழந்தையின் தந்தை ஊரன் என்னிடம் வந்தான் – என்று பரத்தை கூறுகிறாள். கடிமனை – குழந்தை மணம் கமழும் மனை – கட்டித் தொங்கும் பெரிய மணியின் ஒலி கேட்கிறது.  மணல் பரப்பி ஆடி ஒலிக்கும் இலைகளுடன் பந்தல் போடப்பட்டுள்ளது. பாணன் பேரியாழ் இசைத்துக்கொண்டு காவல் புரிகிறான். மற்றொரு பக்கம் திருந்திழை என்னும் தாலி அணிந்த மகளிர் விரிச்சி (நற்சொல்) கேட்டுக்கொண்டு நிற்கின்றனர்.
இன்னொரு பக்கம் மணம் கமழும் துணிவிரிப்புப் போர்த்திய மெல்லிய பஞ்சணையில் பச்சிளங்குழந்தை செவிலியுடன் உறங்குகிறது. வேறொரு பக்கம் வெண்சிறு கடுகெண்ணெய் தேய்த்து நீராடிய பின்னர் மேனியில் பசு நெய்யைப் பூசிக்கொண்டு நள்ளிரவில் கண்களை மூடிக்கொண்டு தாய் படுத்திருக்கிறாள்.     குழந்தையின் தந்தை ஊரன், அகன்ற துறையை உடைய ஊரன், திருடனைப் போல என்னிடம் வந்தான். குழந்தை பிறந்த செய்தியைச் சொல்பவன் போல வந்தான்.