• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Feb 21, 2024

நற்றிணைப்பாடல் 322:

ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;
வாய்கொல் வாழி – தோழி! வேய் உயர்ந்து,
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக்
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது,
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணரக் கூறி, வேலன் இன் இயம் கறங்கப் பாடி,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே.

பாடியவர்: மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் : திணை : குறிஞ்சி

பொருள்:

தோழீ! வாழ்வாயாக! மூங்கில் உயர்ந்து வளரப்பெற்று இடையே வெட்டி நெருக்கி வைத்தாற்போன்ற பின்னிய புதர்களையுடைய மலைப் பிளப்பை அடுத்த துறுகல்லிடத்து; ஊனைத் தின்னுகின்ற பெண்புலிக்கு உளதாகிய அஞ்சத்தக்க பசியைப் போக்க வேண்டி; மக்கள் இயங்குகின்ற நுழைதற்கரிய சிறுவழியை யடுத்து வாள் போன்ற கோடுகளையும் கொடிய கண்ணையுமுடைய வலிய ஆண்புலி பதுங்கியிருக்கும் மலைநாடனது; தண்ணிதாய்க் கமழ்கின்ற அகன்ற மார்பை உரிமையாகப் பெறாமையால் உண்டாகிய நல்ல நுதலிலே பசப்பெய்திய நினைத்தல் மிக்க நீங்குதற்கரிய இந் நோய்; முருகவேள் அணங்கியதால் உளதாயிற்றென்று அன்னை அறியும்படி சொல்லி; படிமத்தான் (பூசாரி) தனது துடி முதலாய வாச்சியம் ஒலிக்கப் பாடி; பலவாய பூக்களைத் தூவித் துதித்து ‘இவ் யாட்டினை ஏற்றுக்கொள்’ ளென்று, அதனை அறுத்துக் கொடுக்கும் பலிக்காக; அவ்வண்ணம் இந் நோய் தணிவதாயினோ; எவ்விடத்தும் இதனினுங் காட்டில் கொடியது பிறிதொன்று இல்லை கண்டாய்; அவ்வண்ணம் தணியு மென்பது மெய்ம்மைதானோ? ஆமாயிற் கூறுவாய்.