• Sat. May 4th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Feb 20, 2024

நற்றிணைப்பாடல் 321:

செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர,
கான முல்லைக் கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை?
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக,
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற,
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் திணை: முல்லை

பொருள்:

திருத்தமாகச் செய்த கலன் அணிந்த என் காதலி; சிவந்த நிலத்தையுடைய காட்டின்கண்ணே சிறிய மயிரையுடைய யாடுகளின் தெளிந்த ஓசையினிய மணிகளைக் கழுத்திலே பூட்டப்பட்ட கூட்டமெல்லாம் தாம் மேய்வதையொழித்துத் தொழுவம் புகுமாறு பெயராநிற்ப; கானத்தின்கண் உள்ள முல்லையின் அகன்ற வாயையுடைய மலரைச் சாரலின் புறத்து உள்ள பார்ப்பன மகளிர் பறித்துச் சூடாநிற்ப; ஆதித்த மண்டிலம் அத்தமனக் குன்றை அடைகின்ற ஒளி மழுங்கிய மாலைப் பொழுதில்; யான் இல்லாமையால் புல்லென்ற வறுவிய மாளிகையை நோக்கி மெல்ல வருந்தாநிற்பளோ? பாகனே! நமது தேரை விரைவிலே செலுத்திக் காண்! சென்று அழகிய குருந்து மலர்கின்ற காட்டின்கண்ணே நெருங்குதலும்; பெரிய ஒலியையுடைய நம்மூரின் மரங்கள் தோன்றா நிற்கும் ஆதலின் நின்தேர் விரைவிலே செல்லுவதாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *