• Sun. Apr 28th, 2024

இலக்கியம்

Byவிஷா

Jan 30, 2024

நற்றிணைப் பாடல் : 315

ஈண்டு பெருந் தெய்வத்து- யாண்டு பல கழிந்தென,
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,
மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல் ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர்,
மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே.

பாடியவர்: அம்மூவனார் தினை : நெய்தல்

பொருள்:

நெருங்கிய பெரிய தெய்வமெனப் பெயர்கொண்ட யாண்டுகள் பல சென்றதனாலே; கரையையடுத்த துறையிலே கடனீர் அலைத்தலால் மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய வுதவாது ஒழிந்த முரிந்த வாயையுடைய தோணியை; நல்ல எருது முன்புள்ள நடையின் சிறப்பு நீங்கியதேயென்று அதனை உழவர் புல்லையுடைய தோட்டத்திலே தொழில் செய்யாதபடி விட்டொழிந்தாற்போல; நறிய வாசனையுடைய நல்ல தூமங் கொடாராய்; சிறிய மலரையுடைய ஞாழலொடு சேர்ந்தோங்கிய புன்னையின் கொழுவிய நிழலிலே குடமுழாப்போன்ற அந்த மரத்தின் வேரடியிலே பிணித்துப் போகடுந் துறையையுடைய தலைவனே! பெரிதும் சிறப்பினதாகக் கொண்ட நட்பின்கண்ணே நுட்பமாகிய தவறும் வாராதபடி நன்றாக அறிந்து நடக்க வேண்டும். அதனை நீ அறியாயாயின்; நின்னால் விரும்பப்படுவோர் எம்மைப் போல நெகிழ்ந்த தோளும் கலுழ்ந்த கண்ணும் உடையராய் மலர்ந்து முறையே உதிர்ந்து கழியாது மலர்ந்தவுடன் தீய்ந்தாற் போல்வர்காண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *