• Thu. May 2nd, 2024

இலக்கியம்:

Byவிஷா

Feb 1, 2024

நற்றிணைப்பாடல்: 316

மடவது அம்ம, மணி நிற எழிலி
‘மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்’ என,
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளி தரு தண் கார் தலைஇ,
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே

பாடியவர் : இடைக்காடனார். திணை : முல்லை

பொருளுரை:

தோழீ! கேட்பாயாக! முன்பு மலரையுடைய முல்லையைச் செவ்வையாகக் காட்டிக் கயல் போன்ற மையுண்ட கண்ணையும் கனவிய குழையையுமுடையாய்! இம் முல்லை நின் பற்கள்போன்ற அரும்பை யீனும் பொழுதில் யாம் நின்னை யெய்துவேமென்று கூறி; இடமகன்ற ஆகாயத்தில் எழுகின்ற திங்களோ என ஐயுற்றறியும்படியாகிய நினது நல்ல நெற்றியைத் தடவிக் கொடுத்துச் சென்ற நங் காதலர்; தாம் நம்மை விரும்பும் விருப்பமுடையராய் வருதலின்றி வாராது அங்கிருக்கும் இக்காலத்தில்; சுரத்து நெறியையுடைய மலைமேலே அதன் பக்கமெல்லாம் மறையுமாறு காலிறங்கி; நீர்த்துளியைப் பெய்யும் தண்ணிய மேகம் அம் முல்லைகள் அரும்பும்படி மழையைப் பெய்து; அகன்ற ஆகாயத்தினிடத்திலே இடியிடித்தலையுஞ் செய்யாநின்றது; ஆதலின் நீலமணிபோலும் நிறத்தையுடைய இம் மேகம் அறியாமை யுடையதுகாண்; இது மிக்க வியப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *