• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நற்றிணைப் பாடல் 306:

தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ
‘குளிர் படு கையள் கொடிச்சி செல்க’ என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ – தீம் சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?

பாடியவர் : உரோடோகத்துக் கந்தரத்தனார்
திணை : குறிஞ்சி

பொருள் :

கிளிகடி கருவி பொருந்திய கையையுடைய கொடிச்சியே! நீ மனையகம் புகுவாயாக!’ என்று நல்ல இனிய மொழிகளை மொழிந்து; கானவர் மெல்லத் தினைக் கதிரைக் கொய்யத் தொடங்கினர்; ஆதலின் எம் தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்து கொண்டு போமாறு மெல்ல மெல்ல வருகின்ற சிறிய கிளிகளை வெருட்டுதல் இனி எப்படியாகும்? அங்ஙனம் வளைந்த கதிர்களாகிய குலவிய பொறையைக் கொய்தொழித்த கொம்பாகிய தலையுடைய தினைத்தாள்கள்தாம் திருவிழாச் செய்தொழிந்த அகன்ற அவ் விழாக்களம் போலப் பொலிவழிந்து எம்மை வருத்தாநிற்கையில் இவ் வண்ணம் கொல்லை அழிந்த தன்மையையும்; இனிய சொல்லும் நெருங்கிய தொகுதியான ஒளி பொருந்திய வளையுமுடைய இளமையுற்ற எங்கள் தலைமகள்; முன்பு சிறிய தினைப் புனத்துப் பெரிய மேற்கூரை உடைய கட்டுப் பரணிலே நின்ற நிலைமையையும்; பார்க்கும் பொருட்டுக் காலையிலே தலைமகன் எப்படி வருதல் இயையுமோ? இயையாதே!