• Mon. Dec 2nd, 2024

இலக்கியம்:

Byவிஷா

Nov 12, 2023

நற்றிணைப் பாடல் 298:

வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று – இவள்
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம்
பற்றாய் – வாழி, எம் நெஞ்சே! – நல் தார்ப்
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்,
ஒருமை செப்பிய அருமை, வான் முகை இரும் போது கமழும் கூந்தல்,
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே?

பாடியவர்: விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
திணை: பாலை

பொருள்:

எமது நெஞ்சமே! அயல் நாட்டு மாந்தர் நெறியில் வருகின்ற தன்மையை நோக்கி; அவரைக் கொள்ளை கொள்ளும்பொருட்டுச் சிவந்த அம்பைச் செலுத்திய சினத்தொடு நோக்குகின்ற மறவருடைய; தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமையை முழக்கி எழுப்பும் ஓசையைக்கேட்ட பருந்தின் சேவல்; அச்சமுற்றுத் தன் சுற்றத்திடத்துச் செல்லாநிற்கும் சென்று சேர்தற்கரிய பாலைநிலத்தின்கணுள்ள கவர்த்த வழிகளையுடைய; கருதினவர்க்கு அச்சந்தோன்றுகின்ற அகன்ற இடத்தையுடைய பெரிய பலவாய குன்றுகளைப் பொருள்தேடும் விருப்பினாலே செல்ல நினைந்தும்; இவளுடைய கரும்பு எழுதப்பெற்ற பருத்த தோளைப் பிரிய வேண்டியிருத்தலினால் அதனுக்கஞ்சிப் பலமுறை நோக்கியும்; நீ ஒரு நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுவாயல்லை; நல்ல மாலை அணிந்த பொன்னாலாகிய தேரையுடைய பாண்டியனது மதுரையம்பதியிலே; இவள் தோழி ஒருதன்மையாகப் பொருள்வயிற் செல்லும்படி உறுதிப்படுத்திக் கூறிய அருமையாகிய மொழியினால்; யாம் பெரிய மலைநெறியைத் தழுவிய பின்னும்; வெளிய அரும்பு மலர்ந்த பெரிய மலரின் மணம்வீசும் கூந்தலையுடையாளைப் பார்ப்பதற்கு இயையுமோ? இயையு மாயின் பொருள்வயிற் பிரிந்து சென்று காண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *