• Sun. Apr 28th, 2024

நற்றிணைப் பாடல் 297:

Byவிஷா

Nov 11, 2023

பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,
நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்;
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ,
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;
”எவன்கொல்?” என்று நினைக்கலும் நினைத்திலை;
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே;
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள், அன்னை;
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே.

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
திணை: குறிஞ்சி

பொருள்:
பொன் கிண்ணத்தில் வைக்கப்பட்ட பால் கீழே (கிழக்கு) இருக்கிறது. நீ பருகவில்லை. உன் அழகொளி மிளிறும்படி நடந்து செல்லுவாய். இப்போது நடக்கவும் இல்லை. பல விரிப்புகள் கொண்ட மெத்தையில் படுக்கை கொள்ளாமல்
துடித்துக்கொண்டிருக்கிறாய். ஏதோ நினைக்கிறாய். மகிழ்ச்சி இல்லா மகிழ்ச்சியில் திளைப்பது போல் காணப்படுகிறாய். இது எதனால் என்று நீ நினைத்துப் பார்க்கவும் இல்லை. உனக்குள் ஏதோ ஒரு குறிப்பு பெரிதாகத் தெரிகிறது. பிரிந்திருக்கும் காலை உடைய ஆண்மயில் மலர் மொட்டுகளை உண்ணாமல் முதிர்ந்த மிளகுக்கொடி படர்ந்திருக்கும் விளைநிலத்தில் (யாப்பு) உறங்கும் நாட்டை உடையவன் உன் காதலன். அவன் உன் கனவில் மெல்ல வந்து உன்னைத் தழுவியிருக்கிறான். அதனால் நீ ஆசை-மயக்கம் கொண்டிருக்கிறாய். இதனை உன் தாயே தெரிந்துகொண்டுவிட்டாள். என்னிடம் மறைக்காதே, என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *