

நற்றிணைப் பாடல் 230:
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,
கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்
கயற்கணம் கலித்த பொய்கை ஊர!
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்;
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க,
புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்தாஅங்கு,
இனிதே தெய்ய, நின் காணுங்காலே.
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்
திணை: மருதம்
பொருள்:
பரத்தையிடமிருந்து தலைவன் வருகிறான். தலைவி ஊடுகிறாள். தோழி சொல்கிறாள். பெண்யானையின் காது போல் விரிந்திருக்கும் பச்சை நிற இலைகளையும், குளத்தில் கூட்டமாக அமர்ந்திருக்கும் கொக்கு போல் கூம்பி நிற்கும் மொட்டுகளையும், பருத்த காம்புகளையும் கொண்டிருக்கும் ஆம்பல் மலர் அமிழ்தம் போல் மணம் வீசிக்கொண்டு குளுமையான போது நிலையில், கிழக்கில் தோன்றும் கதிரவன் போல இருள் கெட்டு விடியும் வேளையில் விரிவதும், கயல் மீன்கள் பிறழ்வதுமான பொய்கையை உடைய ஊரனே! உன் மனைவி இங்கு ஊடல் கொண்டிருக்கிறாள். அவளை விட்டுவிட்டு ஊடல் கொள்ளாத உன் பரத்தையிடம் சென்று அவளுக்கு அருள் புரி. நீ இல்லாமல் உன்னை நீனைத்துப் புலம்பிக்கொண்டிருந்த நிலை போகும்படி, புதிதாக வறண்டுபோய்க் கிடந்த வயலில் நிறைந்த ஆற்று வெள்ளம் பாய்வது போல நீ இங்கு வரக் கண்ணால் கண்டதே போதுமானது.