

நற்றிணைப் பாடல் 231:
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல,
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி! பண்டும்,
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்
கானல்அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே.
பாடியவர்: இளநாகனார்
திணை: நெய்தல்
பொருள்:
மாசற்று விளங்கிய நீல வானத்தில் கைகூப்பித் தொழும்படி எழுமீன் மண்டலம் விளங்குவது போல நீலநிறக் கடல் பரப்பின் மேலே சிறிய வெள்ளைக் காக்கைகள் பறக்கும் கடல்-துறை தனித்துக் கிடக்கிறதே!
தோழி! பழங்காலம் முதல் ஊருக்குள்ளே வாழும் ஊர்க்குருவி முட்டையை உடைத்தது போன்று கருநிறக் காம்புகளில் புன்னைப் பூ பூத்துக்கிடக்கும் கானலில்
கொண்கன் தந்த காதல் நெஞ்சை விட்டு நீங்காமல் உருத்திக்கொண்டிருக்கிறதே! தலைவன் காத்திருக்கும்போது தோழி இவ்வாறு கூறி, அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்துகிறாள்.
