

நற்றிணைப் பாடல் 229:
”சேறும், சேறும்” என்றலின், பல புலந்து,
”சென்மின்” என்றல் யான் அஞ்சுவலே;
”செல்லாதீம்” எனச் செப்பின், பல்லோர்
நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே;
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு,
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,
உழையீர் ஆகவும் பனிப்போள் தமியே
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,
ஆடிய இள மழைப் பின்றை,
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே?
பாடியவர்: ஆசிரியர் பெயர் இடம் பெறவில்லை
திணை: பாலை
பொருள்:
தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
“செல்ல இருக்கிறேன், செல்ல இருக்கிறேன்” என்று சொல்கிறீர்கள். “சரி சென்று வருக” என்று சொல்வதற்கு நான் அஞ்சுகிறேன்.
“செல்லாதீர்கள்” என்று நான் சொன்னால் என் நெஞ்சில் பல பேர் குத்திப் புண்ணாக்குவது போல் இருக்கும் ஆதலால் அப்படிச் சொல்லவும் நான் அஞ்சுகிறேன். அதனால், “செல்லுங்கள், சென்று எண்ணிய செயலை முடியுங்கள், சென்றது போல அங்கேயே காலம் நீட்டிக்காதீர்கள்” என்கிறேன். இதனைக் கேட்டதும் இவள் நிலைமையைப் பாருங்கள். நீர் இவளது மார்பகத்தில் அணிகலன்களின் அழுத்தம் தோன்றுமாறு தழுவிக்கொண்டிருக்கும்போதே இளமழைக்குப் பின்னர் தோன்றும் வாடைக்காற்று இவள்மீது வீசுவதைப் பாருங்கள். நீர் அருகில் இருக்கும்போதே நடுங்குகிறாள். தனிமையில் நின்றுகொண்டு குழைகிறாள். இவளது கண்ணில் இளமழை தோன்றிப் பொழிகிறது. பின்னர் வாடைக்காற்று வீசும் நடுக்கமும் தெரிகிறது.
