
என் எனப்படுமோ தோழி! மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
அருளான் கொல்லோ தானே கானவன்
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,
அழுந்துபட விடரகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?
பாடியவர்: முடத்திருமாறனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
மலை கிழவோன் எனக்காக நள்ளிருளில் அருளமாட்டானோ? அவன் வரவில்லையே, என்னவென்று சொல்வது, என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.
தோழி! மலை கிழவோனை என்னவென்று எண்ணுவது? மின்னலும் இடியும் முதிர்ந்து தன் கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் கண் தெரியாத நள்ளிரவில் எனக்காக வந்து அருளக்கூடியவன் பண்பு இல்லாமல் அருளாமல் இருக்கிறானோ? கானவன் முதுகு போல் கையைக் கொண்ட யானை, கானவன் வில்லிலிருந்து விரைந்து பாயும் அம்புக்குப் பயந்து ஓடி ஆழமான மலைப் பிளவில், அங்கு முழங்கும் அருவியுடன் சேர்ந்து முழங்கும் மலைக்கு உரிமை பூண்டவன் அவன்.
