

நற்றிணைப் பாடல் 222:
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி, பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
செலவுடன் விடுகோ தோழி! பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்,
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது,
பெருங் களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே?
பாடியவர்: கபிலர்
திணை: குறிஞ்சி
பொருள்:
வலிமை மிக்க அடிமரமும் கொம்புகளும் கொண்டது வேங்கை மரம். அதன் பூக்கள் சிவப்பாக இருக்கும். அதன் கிளையில் வடு உண்டாகும்படி முறுக்குக் கயிற்றால் கட்டப்பட்ட ஊஞ்சல். தோழி! அதில் உன்னை உட்கார வைத்து வானத்தில் பறக்கும் மயில்போல் நீ ஆடும்படி உன்னை ஆட்டிவிடட்டுமா? நீ அவர் குன்றத்தைக் காணலாம். பலா மரமும், வாழை மரமும் ஓங்கிய வழை மரக் காட்டில் பெண்யானை உறங்கும். பனிமூட்டங்கள் அதனை மூடிக்கொள்ளும். பெண்யானையைக் காணாமல் ஆண்யானை பிளிறும். அப்படிப்பட்ட சோலையை உடையது தொலைவில் தோன்றும் அவரது உயர்ந்த குன்றம். ஆடும்போது அதனை நீ காணலாம். ஆட்டிவிடட்டுமா? என்று தோழி தலைவியிடம் கேட்கிறாள்.
