• Mon. May 6th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 5, 2023

நற்றிணைப் பாடல் 223:

இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,
பகலும் வருதி, பல் பூங் கானல்;
இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் எல்லி வம்மோ! – மெல்லம் புலம்ப!
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே.

பாடியவர்:உலோச்சனார்
திணை: நெய்தல்

பொருள்:

மெல்லிய நெய்தல் நிலத்தலைவனே இவள் தன்னுடைய காமமிகுதியாலே இது காலைப் பொழுதாமே என்று கருதாளாகி நின்னாலே செய்யப்படும் அன்பைப் பெரிதும் பாராட்டுதல் உடைமையால்; இவளைத் தலையளி செய்யவேண்டி நீ பகற்பொழுதின் கண்ணும் பலவாய மலர்களையுடைய கழியருகிலுள்ள சோலையில் அன்று கொண்ட குறிவயின் வாராநின்றனை; இங்ஙனம் நீயிர் இருவீரும் களவின் ஒழுகுதல் இனிதேயா மென்றாலோ; ஊரார் கூறும் பழி மொழியே காரணமாக இவள் மீள்வதற்கரிய சிறையின்கண்ணே படுத்தப் படா நிற்பள்காண்! ஆதலின் இனி நீ இராப் பொழுதையில் இங்கு வருகுவாயாக! நீ அங்ஙனம் இரவின் வருவையாயினும் பழிச்சொல்லை மேலேறட்டுக் கூறா நிற்கும் இவ்வூர்; சுறாமீனினம் மிக்க நிறைந்த கடற்பரப்பிலுள்ள துறையிடத்தும்; துயிலாத கண்ணினராகிய கொடிய மாதரையும் உடையராயிராநின்றது; ஆதலின் இரவின் வருதலினும் இடும்பை எய்தும் போலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *