

நற்றிணைப் பாடல் 218:
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்;
ஆனா நோய் அட வருந்தி, இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ,
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?
பாடியவர்: கீரங்கண்ணனார்
திணை: நெய்தல்
பொருள்:
ஞாயிறு தொங்கிப்போய் அதன் கதிர் மழுங்கி, இரவானது பூ உதிர்ந்த கொடி போல் தோன்றிப் புலம்பிக்கொண்டிருக்கிறது. வெளவால் ஆங்காங்கே பறக்கிறது. குதிரை நகைப்பது போல் கனைக்கிறது. ஆராய்ந்து பார்க்காத காதலோடு வெளியில் செல்ல எண்ணியவர் வருவேன் என்று சொன்ன காலமும் கடந்து போய்விட்டது. பருத்த அடிமரம் கொண்ட வேப்பமரக் கிளையில் இருந்துகொண்டு கோட்டான் இரவில் பாடுகிறது. தாங்க முடியாத தனிமை நோய் வருத்த உயிர் வாழ்ந்துகொண்டு பரிந்த அடிமரம் கொண்ட பனைமரத்தில் இருக்கும் அன்றில் தன் துணைப்பறவையை அழைக்கும் குரலையும் கேட்பேன் போலும் என்று தலைவி கூறுகிறாள்.