

நற்றிணைப் பாடல் 217:
இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன்
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன் தோழி! நீடு
புலம்பு சேண் அகல நீக்கி,
புலவி உணர்த்தல் வன்மையானே.
பாடியவர்: கபிலர்
திணை: குறிஞ்சி
பொருள்:
புகழுடன் வாழ்பவரின் செல்வம் போலப் பெருமிதத்துடன் தோன்றும் யானை வலிமை மிக்க புலியை மருண்டு ஓடும்படிச் செய்துவிட்டு வருகையில் அருகில் நிற்கும் வேங்கைமரத்தைப் புலி என்று எண்ணி நடுங்கி, பின்னர் மரம் என்று தெளிந்து தன் சினத்தைத் தணித்துக்கொள்ளும் குன்றத்தவன் என் தலைவன். அவன் மிகவும் இனியவன். என்றாலும் அவன்மீது பிணக்குப் போட்டுக்கொண்டு ஊடுவேன். தோழி! அவன் என்னைப் பிரிந்து தொலைவிடம் செல்வதைத் தடுத்து நிறுத்தி என் சினத்தை அவன் தணிக்கவேண்டும் என்பதற்காக. இவ்வாறு தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.
