நற்றிணைப் பாடல் 200
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,
‘சாறு’ என நுவலும் முது வாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ-
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,
‘கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று,
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன்
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்’ எனவே.
பாடியவர்: கூடலூர்ப் பல் கண்ணனார்
திணை: மருதம்
பொருள்:
அரும்பு கட்டிய கதிர் போன்ற ஒள்ளிய பூங்கொத்தினையுடைய நொச்சி மாலையைச் சூடி; யாறு கிடந்தாற் போன்ற அகன்ற நெடிய தெருவின்கண்ணே யாவரும் அறிய இற்றை நாளால் இவ்வூரிலே திருவிழா நடவா நின்றது, எல்லீரும் போந்து காணுங்கோள் என்று கூறிச் செல்லுகின்ற; அறிவு வாய்ந்த குயவனே!; ஆம்பல் நெருங்கிய இனிய பெரிய வயலும் பொய்கையுமுடைய ஊரின்கண்ணே நீ செல்வாயாகி; ஆங்குள்ள மகளிரை யழைத்துக் கூரிய எயிற்றினையும் மெல்லிதாயகன்ற அல்குலையுமுடைய மங்கைமீர்!; கை விரும்புதற்குக் காரணமான நரம்பினையுடைய யாழிலே பாடும் இசைப்பாட்டு நுவலவல்ல பாணன் செய்த துன்பங்கள் மிகப் பலவாகி வளர்வன வாயின ஆதலின்; இப் பாணன் உள்ளால் பொய்யை நிரப்பிவைத்து மேலால் மெயம்மையைக் கொண்டு மூடி நுவலுகின்ற கொடிய சொல்லிலே கண்ணருள் செய்யாது நும்மைப் பாதுகாத்துக் கொள்ளுங்கோள்!; என்று முதலில் நீ திருவிழா நடப்பதை நுவன்று கொண்டு போவதுடன் இதனையும் கூட்டி அவ்விடத்துள்ளார்க்குக் கூறிப் போவாயாக!