யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.
பாடியவர்: கயமனார்
திணை: நெய்தல்
பாடலின் பின்னணி:
பரத்தையிடமிருந்து திரும்பி வந்த தலைவன், தலைவி அவன் மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்து, தோழியைத் தனக்காகத் தலைவியிடம் தூது போகச் சொல்கிறான். அதற்குத் தோழி, “நீ தலைவியைப் பிரிந்து, பரத்தையோடு இருந்து அவளுக்குப் பல கொடுமைகளைச் செய்தாலும், நீ செய்த குற்றங்களுக்காக அவள் வெட்கப்பட்டு, அவற்றை யாரிடமும் சொல்லாமல் மறைத்துக்கொண்டு, உன்மீது அன்போடுதான் இருக்கிறாள்.” என்று கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தலைவி கருநிறமானவள்; நற்பண்புகள் உடையவள். பூட்டப்பட்ட அழகான பெட்டியில் வைத்து அடைக்கப்பட்ட, சூடப்படாத பூக்களைப் போலத் தனியளாக இருந்து அவள் இப்பொழுது உடல் மெலிந்தாள். கூட்டமாகிய மீன்களை உடைய கரிய கழியின்கண் வெள்ளம் அதிகரிக்குந்தோறும், பசுமையான இலைகளுக்கு மேலே உயர்ந்து தோன்றும் திரண்ட காம்பை உடைய நெய்தற் பூக்கள், குளத்தில் முழுகும் மகளிரது கண்களைப் போல் காட்சி அளிக்கின்றன. அத்தகைய குளிர்ந்த நீர்த்துறையை உடைய தலைவனது கொடுமையை, நம் முன்னே சொல்லுதற்கு நாணமுற்றுத் தலைவி மறைக்கிறாள்.