• Sun. Mar 16th, 2025

பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்த இளையராஜா

ByP.Kavitha Kumar

Feb 13, 2025

பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஆஜராகி ஆஜராகி சாட்சியமளித்தார்.

‘தேவர் மகன்’, ‘பாண்டியன்’, ‘பிரம்மா’, ‘குணா’ உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம், தங்கள் அனுமதியின்றி இந்த படங்களின் பாடல்களை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி 2010-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்த போது, 1997-ம் ஆண்டு பாடல்கள் உரிமை வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்த போது, யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களை பற்றி குறிப்பிடவில்லை என்றும், ஆடியோ ரிலீஸ் ஒப்பந்த மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி பி.இளங்கோ முன்பு இளையராஜா ஆஜரானார். அவரிடம் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அதற்கு சாட்சி கூண்டில் ஏறி இளையராஜா பதிலளித்தார். அவரிடம் பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாவும், சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டன. குறுக்கு விசாரணையின் போது இளையராஜா, எனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், உலகலாவிய பொருட்களை பற்றி எனக்கு தெரியாது என்றார். பேர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது உண்மையா என்ற கேள்விக்கு, அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என பதிலளித்தார். இளையராஜாவிடம் ஒரு மணி நேரம் நடந்த சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, நீதிபதி மீண்டும் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.