• Tue. Dec 10th, 2024

நற்றிணைப் பாடல் 5:

Byவிஷா

Aug 3, 2022

நற்றிணைப் பாடல் 5:

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.

பாடியவர் பெருங்குன்றூர்கிழார்
திணை குறிஞ்சி
துறை தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.

பொருள்:

 வாடைக்காலம் இளையரைச் சேர்ந்திருக்கச் செய்யும். அந்த வாடைக்காலத்தில் நீ தலைவனைப் பிரிந்து உன் மழைக்கண்ணைத் தூதாக விட்டால் அது அவரிடம் செல்லுமா? அடுத்து வரும் பனிக்காலத்தில் (அற்சிரம்) உன்னால் பிரிந்து வாழமுடியுமா? இவ்வாறு தோழி தலைவியிடம் சொல்வதைக் கேட்டுத் தலைவன் பிரிவைத் தவிர்க்க வேண்டும் என்பதும், பிரிந்தால் வாடை வருவதற்கு முன் வந்துவிட வேண்டும் என்பதும் தோழியின் குறிப்புரை.
அற்சிரக் கால வரவு பாடலில் வருணனை செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்துக்குப் பின்னர் அற்சிரக்காலம் (பனிக்காலம்) வரும். மழைக்காலத்தில் நிலம் நீரைப் பருகும். குன்றம் தழைக்கும். அகன்ற வாயை உடைய சுனைகளில் நீர்ப்பூப் பயிர் கால்கொள்ளும். குறவர் வெட்டிப்போட்ட நறவங்கொடி (வெற்றிலைக்கொடி போலும்) மீண்டும் தழைத்துச் சந்தன மரத்தைச் சுற்றிக்கொண்டு ஏறித் துளிர் விடும். இப்படிப் பெருமழை பொழிந்த மேகம் கதிரவன் தெற்கு நோக்கிச் செல்லும் அற்சிரக் காலத்தில் வாடைக்காற்றின் விசையால் தெற்கு நோக்கிச் செல்லும். இந்தக் காலத்தில் பிரிவால் விடும் கண்ணீர்த்தூது பிரிந்திருப்பவரிடம் போய்ச் சேருமா? என்று தலைவன் பொருள் தேடச் செல்லப்போவது அறிந்த தோழி தலைவிக்குச் சொல்வது போலத் தலைவன் கேட்கும்படிச் சொல்கிறாள்.