நற்றிணைப் பாடல் 4:
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
‘அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு’ எனக் கூறின்,
கொண்டும் செல்வர்கொல்- தோழி!- உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?
பாடியவர் அம்மூவனார்
திணை நெய்தல்
துறை தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.
பொருள்:
தோழி! கடற்கரையின் அழகிய சிறுகுடியில் வாழும் மீன் பிடிக்கும் பரதவர், நீல நிறப் புன்னை மர நிழலில் தங்குவர். குளிர்கடல் கொந்தளிக்காத நேரத்தில் அழகான ஓட்டைகள் உடைய மீன் வலையை உலர்த்துவர். அவர்களைச் சார்ந்த தலைவனிடம், “ஊரின் அலரை அன்னை அறிந்தால் இன்ப வாழ்வு இனியில்லை” என்று கூறினால் நம்மை அவருடன் அழைத்துச் செல்வார். வெள்ளை உப்பை வாங்கிய வணிகர் வண்டிகளிலேற்றி வரும் வழியில் பசுக்கூட்டங்களை அகற்ற ஓசை எழுப்புவர். மணல் வழியில் வண்டியைச் செலுத்துவர். அவர்களின் சத்தம் கேட்டு வயல்களிலிருக்கும் கருங்கால் வெளை நாரைகள் அஞ்சும். இவ்வாறான கடற்கரையிலுள்ள தம்முடைய ஊருக்கே நம்மை அழைத்துச் செல்வார்.
உள்ளுறை உவமம்:- உப்பு வணிகர் வண்டியை மணலில் செலுத்தி வரும் ஓசையைக் கேட்டு நாரைகள் அஞ்சும் என்றது, தலைவனைச் சார்ந்த பெரியோர்கள் தலைவியினைப் பெண்கேட்டு வரும் மணமுரசொலி கேட்டு, அலர் தூற்றும் பெண்கள் அஞ்சுவர்.