

நற்றிணைப் பாடல் 6:
நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
நார்உரித் தன்ன மதனில் மாமைக்
குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்
திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!
‘இவர்யார்?’ என்குவன் அல்லள்; முனாஅது
அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி ஆகும்
வல்வில் ஓரி கானம் நாறி
இரும்பல் ஒலிவரும் கூந்தல்
பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே!
பாடியவர் பரணர்
திணை குறிஞ்சி
துறை இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.
பொருள்:
தலைவன் தன் நெஞ்சை நோக்கிப் பேசுகிறான் : ‘என் நெஞ்சே ! ஆம்பல் பூவின் தண்டை உரித்தாற் போன்றிருக்கிற, சற்று அழகு குறைந்த மாமை நிறமும், குவளைக் கண்ணும், தேமல் படர்ந்த அல்குலும், பெரிய தோள்களும் உடைய நம் தலைவியிடம் நமது வருகையை யாரேனும் சென்று தெரிவித்தால் ‘அவர் யார்?’ என்று கேட்கமாட்டாள். குமிழ மரத்தின் கனிகளை இளமான்கள் விரும்பி உண்ணும் வல்வில் ஓரியின் கானம் போல நறுமணம் கமழ்கின்ற அடர்ந்த கருங்கூந்தலையுடைய அவள் ‘யாம் வந்திருக்கிறோம்’ என்பதைக் கேட்டவுடனே களிமயக்கம் கொள்வாள்’.
‘அவ்வாறு சென்று சொல்ல யாருமில்லையே !‘ எனக் குறிப்புணர்த்தித் தனக்கு உதவுமாறு தோழியைத் தலைவன் வேண்டுவதை நாம் உணர்கிறோம். தலைவி அவனை நன்கறிவாள் என்பதையும் அவனுக்காகவே காத்திருக்கிறாள் என்பதையும் “இவர் யார் என்குவள் அல்லள்”, “பெரும்பேதுறுவள் யாம் வந்தனம் எனவே” எனும் கூற்றுகளால் உணரலாம். மானுக்குக் குமிழ மரத்தின் கனிபோலத் தலைவிக்குத் தலைவன் வரவு இனியது எனும் குறிப்புப் பொருள் கவிதையில் உணர்த்தப்படுகிறது.
