மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.
பாடியவர்: கோவதத்தர்
பாடலின் பொருள்:
கற்கள் விளங்கும் பாலைநிலத்தைக் கடந்து சென்ற தலைவர் திரும்பி வருவதாகக் குறிப்பிட்ட கார்காலம் வாராத காலத்திலேயே, பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை, கார் காலத்து மழையென்று நினைத்து, கொன்றை மரத்தின் சிறு கொம்புகளில் ஒழுங்காக நெருக்காமாகக் கொன்றை மலர்கள் மலர ஆரம்பித்துவிட்டன. ஆதலின், பருத்த அடிப்பக்கத்தையுடைய கொன்றை மரங்கள், நிச்சயமாக மடமை பொருந்தியவைதான்.
பாடலின் பின்னணி:
கார்காலம் வந்தபின்பும் தலைவன் வராததால் வருந்திய தலைவியை நோக்கி, “இப்போது பெய்யும் மழை பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழை. இதைக் கார்காலத்து மழை என்று மயங்கிக் கொன்றை மரங்கள் மலர்ந்தன. இது கார்காலம் அன்று. நீ வருந்தாதே.” என்று தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.