• Mon. Apr 21st, 2025

குறுந்தொகைப் பாடல் 42

Byவிஷா

Mar 20, 2025

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத் தியம்பு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.

பாடியவர்: கபிலர்.

பாடலின் பின்னணி:
தலைவன் தலைவியோடு கூடி மகிழலாம் என்று எண்ணி, இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருகிறான். அங்குத் தலைவி வரவில்லை. தோழி மட்டும் வருகிறாள். “இனி இரவு நேரங்களில் தலைவி வரமாட்டாள். இதுவரை நீ அவளோடு இரவு நேரங்களில் சந்தித்ததைப் போல் இனிமேல் சந்திக்க முடியாது. அதனால், உனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பு குறையும் என்று எண்ண வேண்டாம்.” என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
நடு இரவில் மலையில் பெய்த பெருமழை, பின்னர் அருவியாக (மலைப்பிளப்புகளில்) ஒலிக்கும் குறிஞ்சிநிலத்தையுடையவனே! தலைவியோடு நீ கூடி மகிழாவிட்டாலும், உன்னிடத்தில் அவளுக்குள்ள நட்பு குறையுமோ?