

ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,
உளெனே- வாழி, தோழி! வளை நீர்க்
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி,
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர்,
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய,
பைபய இமைக்கும் துறைவன்
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே!
பாடியவர்: பேரிசாத்தனார்
திணை: நெய்தல்
பொருள்:
தோழீ! வாழி! சூழ்ந்த கடல்நீரில் விரைந்து செல்லும் சுறாமீனைப் பிடிக்க வலை வீசி எறிந்த வளைந்த மீன் பிடிக்கும் படகினையுடைய பரதவர்; இழுக்கும் விசையையுடைய தூண்டிலின் இடையிடையே அமைந்து காற்று மோதுகின்றன. எரிகின்ற கற்றை சாய்ந்து பரவிய நெருங்கிய விளக்கின் ஒளி நீல நிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே ஒளிரும் மீன்களைப் போல் சிறுகி மெல்ல மெல்ல ஒளி வீசாநிற்கும் துறையையுடைய தலைவனது உடம்பை அணைந்து முயங்கும் முயக்கத்தை யான் அடையப் பெறாத விடத்து உயர்ந்த மணல் மிக்க திடலில் சூழ்ந்த நீண்ட கரிய பனையினது நெருங்கிய மடலிற் கட்டிய குடம்பையின் கண்ணே யிருக்கின்ற பிரிவுற்று வருந்துதலையுடைய வெளிய நாரை இரவு நடுயாமத்தே நரலுந்தோறும் உருகி அள்ளலாகிய குழம்பு போன்ற என்னுள்ளத்தொடு என் மனமும் உடைந்து இன்னும் உயிர் உடையேனாயிரா நின்றேன்; என் உயிர்தான் எவ்வளவு வன்மையுடையது காண் !
