• Sun. Feb 9th, 2025

குறுந்தொகைப் பாடல் 11:

Byவிஷா

Jan 27, 2025

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.

பாடியவர்: மாமூலனார்
திணை: பாலை

பாடலின் பின்னணி:
தலைவன் தமிழ்நாட்டிற்கு அப்பால் உள்ள ஒரு நாட்டிற்குச் சென்றிருக்கிறான். அவனைப் பிரிந்திருப்பதால் தலைவி வாடுகிறாள். இனியும் அவனைப் பிரிந்திருந்து, அவன் வருவான் என்று காத்திருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு வருகிறாள். “இவ்வாறு இங்கிருந்து வருத்தப்படுவதைவிட, தலைவன் இருக்கும் இடத்திற்கே செல்வது சிறந்தது” என்று தன் தோழியின் காதில் விழுமாறு தனக்குத் தானே தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடலின் பொருள்:
எனது நெஞ்சே நீ வாழ்வாயாக! உடல் மெலிவினால், சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கைவளையல்கள் நெகிழ, நாள்தோறும், தூக்கமில்லாமல் கலங்கி அழும் கண்களோடு, தனிமையில் வருந்தி, இப்படி இங்கேயே தங்கியிருப்பதைத் தவிர்த்து, தலைவர் இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கு இப்பொழுதே எழுவாயாக. முன்னே உள்ளதாகிய, குல்லையாலாகிய கண்ணியை அணிந்த, வடுகருக்குரிய இடத்திலுள்ள, பல வேற்படையையுடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள வேறுமொழி வழங்கும் வடுகர் நாட்டில் இருந்தாலும், அவர் இருக்கும் நாட்டிற்கு செல்லலாம் என்று எண்ணினேன்.