கடந்த ஐந்தாண்டு கால திமுக அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்ததை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதை கண்டித்தும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மார்ச் 17 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கடலூரில் பாமக தலைவர் அன்புமணி, தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் பெரும் தொண்டர்கள் பலத்தோடு நடந்தது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தையே கெடுக்கும் வகையில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வாய் துடுக்காக பேசி இப்போது மாட்டிக் கொண்டு விட்டார்.
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி சண்முகம், “ஆட்சி முடியும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உங்க கனவை சொல்லுங்க என்று ஒரு திட்டம் கொண்டு வருகிறார்.
எனக்கு நயன்தாரா வேணும்… நயன்தாரா கல்யாணம் பண்ணனும் அதான் என் கனவு. உன்னால நிறைவேற்ற முடியுமா?” என்று அந்தத் திட்டத்தை கிண்டல் செய்வதாக நினைத்து பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார் சண்முகம்.

இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
சண்முகம் அவ்வப்போது சர்ச்சை பேச்சுகளை பேசி வம்பு வழக்கில் சிக்கிக் கொள்பவர். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக சிவி சண்முகத்தை உயர் நீதிமன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம்.
பொதுவெளியில் பேசும்போது வரைமுறையுடன் பேச வேண்டும் என சண்முகத்தை கண்டித்து, அவர் மீதான வழக்கை ரத்து செய்தார் உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்.

பெண்கள் பாதுகாப்பு பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்பாட்டத்தில் இப்படி பேசி ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விட்டார் என அதிமுகவினரே சி.வி. சண்முகம் மீது கோபத்தில் உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சி.வி. சண்முகத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள் கட்சி மூத்தவர்கள்.



