• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை

Byவிஷா

Jun 14, 2025

பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) வென்றமைக்காக வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பழங்குடியின மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கல்வராயன்மலையைச் சேர்ந்த கருமந்துறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ஆ.ராஜேஸ்வரி என்ற பழங்குடியின மாணவி, அண்மையில் நடைபெற்ற ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 417-வது இடத்தில் தேர்ச்சி பெற்று, சென்னை ஐஐடியில் பயில தகுதி பெற்றுள்ளார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மாணவியின் தந்தை 2023-ல் இறந்துவிட்டார். தாயார் கவிதா, அக்கா ஜெகதீஸ்வரி, அண்ணன் கணேஷ் ஆகியோருடன் கருமந்துறை மலைப் பகுதியில் வசித்து வரும் மாணவி ஆ.ராஜேஸ்வரி, பழங்குடியின நலத் துறையின் சிறப்பு வகுப்புகளிலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு பயிற்சி மையத்திலும் சேர்ந்து உயர்கல்வி நுழைவுத் தேர்விற்கு தயாரானது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜேஇஇ அட்வான்ஸ்டு கவுன்சிலிங்கிற்காக குமிழி ஏகலைவா உண்டு உறைவிடமாதிரி மேல்நிலைப் பள்ளியில், பழங்குடியினர் நலத்துறை, வாசுகி அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் உயர்கல்விக்கான பயிற்சியும் பெற்று வருகிறார். இவர் சென்னை ஐஐடி-ல் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் பயிலவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 12-ம்தேதி சேலம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவி ஆ.ராஜேஸ்வரியை நேரில் அழைத்துப் பாராட்டி, பழங்குடியினர் நலத் துறையின் தொல்குடித் திட்டத்தின் கீழ் ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை வழங்கினார். மேலும், ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கினார்.
இதுகுறித்து மாணவி ராஜேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் ஸ்டாலின் என்னை நேரில் பாராட்டி மடிக்கணினி வழங்கினார். மேலும், வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையும் வழங்கினார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.