மதுரை தமிழ்நாடு சேம்பர் மெப்கோ அரங்கில் நடைபெற்ற EPC & APEDA இணைந்த கருத்தரங்கில், இந்தியா–இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) பின்னணியில், இந்தியா ஏற்றுமதி மேம்பாட்டு மையமான EPC மற்றும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் (AVM) இணைந்து வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoE) கையொப்பமிடப்பட்டது.

இந்நிகழ்வில் EPC தலைவர் ராஜமூர்த்தி, EPC துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் , AVM மாநிலத் தலைவர் முனைவர் க.திருமுருகன் மற்றும் பொருளாளர் விஜயன் ஆகியோர் கையொப்பமிட்டனர். APEDA பிராந்தியத் தலைவர் ஷோபனா குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் மூலம் அப்பளம், வடகம், மோர் வத்தல் மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. இதன் மூலம் உறுப்பினர்களுக்கு ஏற்றுமதி நடைமுறைகள், தரநிலைகள், உணவு பாதுகாப்பு மற்றும் பேக்கேஜிங் குறித்து EPC வழிகாட்டும், மேலும் வெளிநாட்டு வாங்குபவர்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி விற்பனை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். FSSAI, ISO, HACCP போன்ற சான்றிதழ்களை பெற உதவி செய்யப்படும்;
மதுரை பாரம்பரிய உணவுகளாகிய அப்பளம், வடகம், மோர் வத்தல் போன்ற பொருட்கள் தனித்த பிராண்ட் ஆக உருவாக்கப்பட்டு உலகளவில் அறிமுகப்படுத்தப்படும். அத்துடன், வெளிநாட்டு கண்காட்சிகள் மற்றும் வர்த்தக விழாக்களில் பங்கேற்க EPC உதவி வழங்கும், ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்கள், சான்றிதழ்கள் மற்றும் அனுமதி கடிதங்கள் பெற வழிகாட்டப்படும். ஏற்றுமதியில் வாங்குபவர் பணம் செலுத்தாத பட்சத்தில் அந்தப் பணத்தை திரும்பப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் EPC மற்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மேற்கொண்டு உதவிடும். இதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரும், பொருளாதார முன்னேற்றமும் உலக சந்தை அணுகலும் கிடைக்கும்.
இந்த வரலாற்று நிகழ்வை முன்னிட்டு மாநிலத் தலைவர் முனைவர் க. திருமுருகன், “நாம் அனைவரும் ஒரே தொழிலில் இருந்தாலும், ஒவ்வொருவரின் முயற்சிக்கும் நமது சங்கம் எப்போதும் உறுதுணையாக இருக்கும்; எனவே அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு இந்த வரலாற்று தருணத்தை சிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.