• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Byவிஷா

Sep 29, 2023

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 215 பேருக்கு தண்டனை வழங்கி பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தருமபுரி மாவட்ட நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992-ம் ஆண்டு வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.
குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 4 ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உள்பட 215 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சம்பந்தப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎஃப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், வாச்சாத்தி மலைக் கிராமத்திற்கு நேரில் சென்றும் விசாரணை நடத்தினார். வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், தருமபுரி மாவட்ட நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், குற்றம் புரிந்தவர்களிடம் 5 லட்ச ரூபாய் வசூலிக்கவும், பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கவும், அப்போதைய எஸ்.பி. மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.