• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசின் செயலால் அப்செட்டான உயர் நீதிமன்ற நீதிபதிகள்!

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்கு தொகுப்பு நிதி உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, ஆட்சியர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.

கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டுமான பணிகளுக்கு தடை விதித்ததுடன், நிலத்தை மதிப்பீடு செய்ய இரு குழுக்களை நியமித்தது.

இவ்விரு குழுக்களின் மதிப்பீடும் குறைவாக உள்ளதாக மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் குறிப்பிட்ட போது, ஆறு மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த பின்னணியில் வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதிப்பீட்டாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என மனுதாரர் தெரிவித்தார்.

இதையடுத்து, கோவில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்ய ஏதுவாக, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவில் அறங்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

முன்னதாக, சிதிலமடைந்த கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்காக தொகுப்பு நிதி உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும், நிலத்துக்கான இழப்பீட்டை முதலில் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற அனுமதியின்றி, கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.