வத்திராயிருப்பில் தள்ளுவண்டி கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ரோடுகளில் புற்றீசலாய் பெருகிவரும் பூக்கடைகளாலும் இரவு நேர தள்ளுவண்டி கடைகளாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய போலீசார் வேடிக்கை பார்ப்பதால், மேலும், மேலும் ஆக்கிரமிப்புகள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இங்குள்ள முத்தாலம்மன் பஜாரில் தான் அனைத்து ஊர்களுக்கும் செல்லும் சாலைகள் ஒன்றிணைகின்றன. இப்பகுதிக்கு வரும் அனைத்து பஸ்களும் இந்த மைதானத்தில் இருந்து கிளம்பி செல்வதால் பஸ்டாண்டாகவும் செயல்படுகிறது. பொதுக்கூட்டங்கள் நடப்பது முதல் அனைத்து நிகழ்வுகளும் இங்கு தான் நடைபெறுகிறது. இதனால் இப்பகுதி எப்பொழுதும் அதிக மக்கள் நடமாட்டமும், அதிக போக்குவரத்துக் கொண்டதாகவும் உள்ளது.
இங்குள்ள கலையரங்க மேடையின் மேல்பகுதி முழுவதும் பூக்கடைகள் உள்ளன. இவை நாளுக்கு, நாள் புற்றீசலாய் அதிகரித்து மெயின் ரோடு வரை பரவி விட்டது. பூ வியாபாரிகள் தாங்கள் இஷ்டத்திற்கு ஒரு டேபிளையும், ஸ்டூலையும் போட்டு பூக்கடைகளை பஜார் முழுவதும் பரப்பி போக்குவரத்தை நிலைகுலைய செய்கின்றனர்.
மற்றொரு புறம் இரவு நேர தள்ளுவண்டி உணவகங்கள், கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் தங்களின் வியாபாரம் முடிந்தவுடன் தள்ளு வண்டிகளை இருப்பிடத்திற்கு கொண்டு செல்லாமல் பகலிலும் அங்கேயே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
இது தவிர பழக்கடை வியாபாரிகள் ஒவ்வொரு நாளும் பழக்கூடைகளை நடுரோடு வரை அடுக்கி வைத்து பெருமளவு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இப்படி மூன்று தரப்பினரும் ஆளாளுக்கு இஷ்டத்திற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளதால்
பத்திரப்பதிவு அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகங்களுக்கு வருபவர்கள், மற்றும் பஜாரில் பொருட்கள் வாங்க கிராமங்களில் இருந்து வரும் சிறு வியாபாரிகள் என அனைவரும் தங்கள் இரு சக்கர வாகனங்களை கூட நிறுத்துவதற்கு வழியின்றி நடுரோட்டில் நிறுத்துகின்றனர். இதனால் பஸ் உட்பட வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
காலை மாலை நேரங்களில் பஜார் முழுவதும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு அங்கு ஒரு போலீசார் கூட இருப்பதில்லை.
வத்திராயிருப்பு போலீசார் மிகுந்த அலட்சியமாகவே உள்ளனர். உயர் அதிகாரிகள் வருகையின் போது மட்டும் போலீசார் ஆங்காங்கே நின்று கொண்டு அதிகாரிகளுக்கு சல்யூட் அடித்துவிட்டு அந்த நேரத்தில் மட்டும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தி விட்டு, அவர்கள் சென்றவுடன் மீண்டும் தங்கள் இருப்பிடம் நோக்கி சென்று விடுகின்றனர். காவல்துறையினரின் இந்த அலட்சியப் போக்கு இப்பகுதி மக்களை பெரிதும் சிரமத்தில் தள்ளுகிறது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.