• Tue. Apr 30th, 2024

வெப்ப அலை : காலை 11 மணிக்குள் தடுப்பூசி செலுத்த உத்தரவு

Byவிஷா

Apr 17, 2024

தமிழ்நாட்டில் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்ப அலை அதிகரித்து வருகிறது. அதை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்கும் என்றும், வெயில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், சுகாதார நிலையங்களில் தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளிர் பதனக் கிடங்குகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அறையின் சுவர்களையொட்டி மருந்துகளை வைக்காமல், அதிலிருந்து சற்று தள்ளி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதேபோன்று, சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். இதன் மூலம் வெப்ப அலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். அதனுடன், பொது மக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளர்களுக்கும் அது உகந்த நேரமாக இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *